Saturday 28 July 2012

காமராசர் எனும் மாமனிதர்

     காமராசர் படிக்காதவர். வறுமை,பசியால் பள்ளிக்குச் சென்று படிக்க இயலாத ஏழைக் குழந்தைகள் படிக்கும் பொருட்டு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் தான் நாடு வளம் பெறும் பொருட்டு  வைகை,  சாத்தனூர்,  பேச்சிப்பாறை,  பெருஞ்சாணி,மணிமுத்தாறு,  அமராவதி போன்ற அணைகள் கட்டப்பட்டன. அவர் ஒரு போதும் பதவியைத் தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் தவறாக பயன் படுத்தியதில்லை.

     காமராசருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் கல்வியை ஏலம் விட்டு சுயநிதி கல்லூரிகள் பெருக வழி வகுத்தனர். இதனால் சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு கல்வி எட்டாக் கனியாகி விட்டது. காமராசர் ஆட்சிக்குப் பின் எந்தவொரு அணைக்கட்டுகளும் கட்டப்படவில்லை.

   காமராசர் மக்களுக்காக பாடுபட்டார். மக்களைப் படிக்கச் சொன்னார். பின்வந்த ஆட்சியாளர்களோ தன் மக்களுக்காக,  தன்  உறவினர்களுக்காக     பாடுபட்டனர்.   சாராயக்கடைகளைத்   திறந்து   மக்களுக்கு   குடிக்கக்  கற்றுக் கொடுத்தனர்.

   தமிழகத்தில் 4000 நூலகங்கள் தான் உள்ளன. ஆனால் சாராயக்கடைகளின் எண்ணிக்கையோ 6900. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் குடிப்போரின் எண்ணிக்கை அதிகம்.மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய தருணம் இது.

     மக்களின் நலனில் அக்கறையற்ற ஆட்சியாளர்களைத் தூக்கி எறிவோம்.

    மாமனிதர் காமராசரை போற்றுவோம். நினைவு கூர்வோம் இந்தத் தருணத்தில்.

    

    

    
    



Monday 23 July 2012

13 வது குடியரசுத் தலைவர்

       இந்திய திருநாட்டின் 13 வது குடியரசு தலைவராக திரு பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசு தலைவர்  தேர்தலில்  மாண்புமிகு சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினர் போட்ட வாக்குகளில் 81  வாக்குகள் செல்லாதவை.இதில் சமாஜ்வாடி ஜனதா கட்சியின் தலைவர் முலயாம் சிங் யாதவின் வாக்கும் அடக்கம். இனி நாடு அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சுபிட்சம் அடையப் போகிறது என்று நாம் நம்பினால் நம்மை விட ஏமாளிகள் இருக்க முடியாது. பிரதம மந்திரியாக ஆகிவிடலாம் என்று கனா கண்டு அது முடியாமல் போக குடியரசுத் தலைவர் வாய்ப்பு கிடைத்துள்ளது. ராகுல் காந்திக்கு ஒரு போட்டியாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

      நாட்டின் மிகப்பெரிய முதலாளிகளின், பண முதலைகளின் ஆலோசகராக இருப்பவரிடம் நாம் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

        முன்னால் குடியரசுத் தலைவர் திருமதி.பிரதிபா பாட்டீல் தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தில் இன்ப சுற்றுலாவுக்காக 205/- கோடி ரூபாய் மக்கள் பணத்தைச் செலவழித்துள்ளார். திரு. பிரணாப் முகர்ஜி அதனை மிஞ்சி நிச்சயம் சாதனை படைப்பார் என்பதில் சந்தேகமில்லை. 

       அடுத்ததொரு சிறந்த ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர். இவரது மாதச் சம்பளம் 1,50,000/-. 200 வேலையாட்கள். நினைத்த நேரத்தில் பறக்க விமானம் மற்றும் இன்னும் ஏராளமான சலுகைகள். இந்த ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் நாட்டுக்குத் தேவையா?.

         

       


Wednesday 18 July 2012

டாஸ்மாக்கும், இலவசமும்:

      தமிழக மக்கள் தொகை                        - 7 கோடி
      குடிப்போர் எண்ணிக்கை                       - 1 கோடி 
      தினமும் குடிப்போர் எண்ணிக்கை       - 49 இலட்சம்
                                    (13 வயது சிறுவர்களும் அடக்கம்)         

           தினமும் குடிப்போர் ஒரு நாளைக்கு ரூ.100/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.3600/-, வருடத்திற்கு ரூ.36000/- மற்றும்  5வருடத்திற்கு ரூ.1,80,000 செலவழிக்கின்றனர். ஆனால் இந்த அரசிடமிருந்து இலவசமாய் பெறுவது ரூ.3500/- மட்டுமே ( மிக்சி,  கிரைண்டர், மின் விசிறி). இதோடு உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவு தனி. குடிப்பழக்கத்தால் சீரழிந்த குடும்பங்கள் எராளம்.

         இந்த அரசாங்கத்தால் மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க முடியவில்லை. ஆனால் சாராயம் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து வழிமுறைகளையும் செய்கிறது. 

         மக்களுக்கும் மின் கட்டணம், பேருந்து கட்டணம்,பால் விலை உயர்வு பற்றி கவலையில்லை. சிறு முனு முனுப்பு கூட இல்லை. 

        ஆண்கள் கூட்டம் டாஸ்மாக்கில், பெண்கள் கூட்டம் கோவில்களில்.

       நாம் எங்கே சென்று கொண்டு இருக்கிறோம். சிந்திக்க வேண்டிய தருணம் இது .                                         

Friday 13 July 2012

ப.சி- உனக்குத் தெரியுமா பசி:

அத்தியாவசிய பொருள்களின் விலை தினமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த இந்த துப்புக்கெட்ட மன்மோகன் அரசுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் செல்வச் சீமான் ப.சிதம்பரமோ 15 ரூபாய் தண்ணீர் பாட்டிலுக்கும், 20 ரூபாய் ஐஸ்கிரீமுக்கும் செலவழிக்கும் மக்கள் 1 ரூபாய் அரிசிக்கும், கோதுமைக்கும் அதிகமாக செலவழிக்கத் தயங்குவது ஏன் என்று கேட்கிறார். 1 ரூபாய் விலையேற்றம் விவசாயிகளுக்குப் போய்ச் சேர்கிறதா அல்லது இடைத் தரகர்களுக்குப் போய் சேர்கிறதா என்று தெரியுமா ப.சி.  வறுமைக் கோட்டின் உச்ச வரம்பு 32 ரூபாய். 32 ரூபாயை ப.சி, மன்மோகன், அலுவாலியாக் களுக்கு  கொடுத்து  வாழச்  சொல்ல வேண்டும்.  இந்த வெட்கம் கெட்ட UPA அரசுக்கு பாடம் புகட்ட இப்போது இருந்தே தயாராவோம்.

      

Saturday 7 July 2012

விவசாயிகள் தற்கொலை:


       ஒரு குண்டூசி தயாரிப்பாளர் தனது பொருளுக்குக்கான விலையை தான் நிர்ணயம் செய்கிறார்.  ஆனால் ஒரு விவசாயி தனது விலை பொருளுக்குத் தான் விலை நிர்ணயம் செய்ய இயலாது.விதை,உரம் விலையேற்றம் மற்றும் இயற்கை இடற்பாடுகளை கடந்து வியாபாரிகள்  நிர்ணயம் செய்த விலையில் தான் விற்க   வேண்டும். கடைசியில் அவனுக்கு மிஞ்சுவது கோவணம் மட்டுமே.

         விவசாயிகள் தற்கொலையில் முதல் இடம் மகாராஷ்ட்ரா,   அடுத்து  ஆந்திரா, கர்நாடகா,மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கார். மன்மோகன் அரசுக்கு இதைப் பற்றிய கவலை இல்லை. ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ள அண்ணா ஹசாரே இது பற்றி குரல் கொடுத்ததாக தெரியவில்லை.

      சாராய வியாபாரி விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான "KING FISHER" விமான கம்பெனிக்கு ரூபாய் 7000 கோடி கடன் உள்ளது. அதைத் தூக்கி நிறுத்த மன்மோகன் அரசு துடிக்கிறது.

     சாராய வியாபாரி விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான "UNITED BREWERIES" கம்பெனிக்கு 40 கோடி கடன் “BANK OF MAHARASTRA" ல் உள்ளது. ஒரு ரூபாய் கூட திருப்பி செலுத்தாமல் மேலும் 150 கோடி கடன் தர அந்த வங்கி முடிவெடுத்துள்ளது.   அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் விவசாயிகள் மற்றும் ஓய்வு ஊதியம் பெறுவோர்.    

       கடனைத் திருப்பிச் செலுத்தாத பெரு முதலாளிகளுக்கு வெண்ணைய். அப்பாவி பொது மக்களுக்கு சுண்ணாம்பு.

       வாழ்க ஜனநாயகம்.

    

Wednesday 4 July 2012

அறிமுகம்

உங்கள் மனதை பக்குவப்படுத்த  எதிர்நீச்சல் வலைப்பூ உதவியாக இருக்கும். தொடர்ந்து சிந்திப்போம்

---- அ.அருணாசலம்