Tuesday 14 August 2012

ஆகஸ்ட் 15-ஒரு சடங்கு
இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகின்றன. 1947 ஆக்ஸ்ட் 15, நள்ளிரவில் விடுதலை அடைந்ததால் தான் என்னவோ இன்னும் இருளில் இருந்து நம்மால் மீள முடியவில்லை.
மொகலாயர்கள் இந்தியாவுக்குள் வந்ததை படையெடுப்பு என்றும், ஆங்கிலேயர்கள் வந்ததை வரவு என்றும் சொல்லப்படுகிறது. மொகலாயர்கள் இந்தியாவுக்குள் வந்து இந்திய பெண்களை மணந்து, இந்திய நாட்டில் ஆட்சி செய்து இந்தியனாகவே வாழ்ந்தார்கள். நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துச் செல்லவில்லை. ஆனால் ஆங்கிலேயர்களோ இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

காந்தி, சுபாக்ஷ் சந்திர போஸ், பக்த் சிங், வ.உ.சி, பாரதி, திருப்பூர் குமரன்,வீரபாண்டிய கட்டபொம்மன், திப்பு சுல்தான்  போன்ற எண்ணற்ற தியாகிகளால் பெற்ற விடுதலையால் மக்கள் சந்தோசப் படும் சூழல் தற்போது இல்லை. நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க இந்திய நாட்டின் பெரு முதலாளிகள், பன்னாட்டு கம்பெனிகள் போன்றோருக்கு ஆட்சியாளர்கள் துணை. அடுத்த ஒரு விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

சந்தைப் பொருளாதாரத்தை திறந்து விட்ட மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம், அலுவாலியா, ரங்கராஜன் போன்ற பொருளாதார மேதைகள் நாட்டை சீரழிவு பாதை கொண்டு சென்று விட்டனர். பிரேசில், கிரீஸ் போன்ற நாடுகள் சந்தித்த சீரழிவை இந்தியாவும் சந்திக்கிறது.

நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, படுக்க இடம் தர இயலாத மன்மோகன் அரசு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பக்களுக்கு இலவச செல்போன் தர இருக்கிறதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்திய எஜமானர்களின் கட்டளையை நிறைவேற்றும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற அடுத்ததொரு சுதந்திரப் போரட்டத்தை ஆரம்பிப்போம்.

விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்.




Tuesday 7 August 2012

பாதை மாறிய கால்கள்

அண்ணா ஹசாரே குழுவினர் புது தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஏப்ரல் 2011 ல் ஆரம்பித்து வைத்த  உண்ணா நோன்பு போராட்டம் இந்த ஆகஸ்ட் 2012ல்  ஒரு  வழியாக  அவர்களாலே  முற்றுப்  புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஊழலுக்கு எதிரான ஒரு வலிமையான ஜன்லோக்பால் மசோதா இயற்றப் படவேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் அண்ணா குழு அமைக்கப் பட்டு ஏப்ரல் 2011 ல் புது தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் உண்ணா நோன்பு போராட்டம் தொடங்கப் பட்டது. அச்சமயம் இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு இருந்ததாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக பெரிது படுத்தப் பட்ட மாயை திட்டமிட்டு உருவாக்கப் பட்டது.அச்சமயம் உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி  போன்ற அனைத்து செலவினங்களும் கார்போரேட் கம்பெனிகளிடமிருந்து வசூலிக்கப் பட்ட நன்கொடைகளினால் சாத்தியமாயிற்று. அச்சமயம் புது தில்லியில் குற்றச் செயல்கள் குறைந்து காணப்பட்டதாக காவல் துறை செய்தி.

அதன் பின் மும்பையில் உண்ணா நோன்பு போராட்ட அறிவிப்பு. இதில் 50,000 பேர் கல்ந்து கொள்வார்கள் என தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் வாயிலாக மாயை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஆனால் கலந்து கொண்டோர் எண்ணிக்கை வெறும் 4000-5000 பேர் மட்டுமே.

தினமும் ஏறும் விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அன்றாட பிரச்சனைகள் ஏராளம். தினமும் அடுத்த வேலை உணவுக்கு வழியின்றி அல்லல் படும் மக்கள் இந்த நாட்டில் ஏராளம். குழு உறுப்பினர்கள் கிரண் பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோருக்கு என்.ஜி.ஒ அமைப்புகள் இருக்கின்றன. அதற்கு வரும் நன்கொடைகளோ ஏராளம்.

ராம்தேவ் பாபா தன் பங்குக்கு கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒரு போராட்டத்தை ஆரம்பித்தார். யோகா கற்றுத் தர கட்டணம் பெற்றுக் கொண்டு அளவில்லாத சொத்து சேர்த்துள்ள அவர் தனது சொத்து மதிப்பு எவ்வளவு என்று இதுவரை சொல்லவில்லை.

64 கோடி போபர்ஸ் ஊழல்.அதன் விசாரணைக்காக செலவிடப்பட்டதொகை 300 கோடி. அது போல் 2G அலைக்கற்றை, காமன் வெல்த்,நிலக்கரி,ஆதர்க்ஷ் போன்ற ஊழல்களின் விசாரணை முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும். இந்த சூழலில் ஜன்லோக்பால் சட்டம் வந்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. ஊழலை மேல்மட்டத்தில் இருந்து ஒழிக்க முடியாது. கீழ் மட்டத்தில் இருந்து தான் ஒழிக்க முடியும்.

இந்தச் சூழலில் அண்ணா குழு கலைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி ஆரம்பித்து நாட்டைத் திருத்தப் போவதாக ஹசாரே அறிவித்துள்ளார். இந்த குழுவின் தோல்விக்கான காரணங்கள் 1. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு 2.ஹரியானா சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு 3. அனைத்து மக்கள் பிரச்சனைகளையும் ஒன்று சேர்த்துப் பார்க்காதது.

பாதை மாறிய கால்கள் ஊர் போய் சேர்ந்ததாக வரலாறு இல்லை.