Thursday 27 September 2012

சொந்த செலவில் சூனியம்

வெட்கம் கெட்ட மன்மோகன் அரசு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, டீசல் விலையேற்றம், எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கை குறைப்பு ஆகிய மக்கள் விரோத முடிவுகளை திணித்துள்ளது.

எண்ணைய் மான்யம் 1.40 லட்சம் கோடியாக உள்ளது.  இந்த ஆண்டு அது 1.60 லட்சம் கோடியாக அதிகரிக்கும். டீசல் விலை லிட்டருக்கு 17 ரூபாய் ஏற்ற வேண்டும். ஆனால் 5 ரூபாய் தான் ஏற்றியுள்ளோம். மண்ணைண்ணைய்  லிட்டருக்கு 13.86 ரூபாய் குறைவாக கொடுக்கிறோம். எரிவாயு சிலிண்டர் 347 ரூபாய் குறைவாக தருகிறோம். பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்று மாமேதை மன்மோகன் கேட்டுள்ளார்.

ஆமாம் மன்மோகன் அவர்களே! பணம் மரத்தில் காய்க்கவில்லை. பெரு முதலாளிகளுக்கும்,கார்ப்போரேட் கம்பெனிகளுக்கும் கொடுக்கும் மானியம் 4.87 லட்சம் கோடி ரூபாய். அதற்கு பணம் மரத்திலா காய்த்தது?.போபர்ஸ் ஊழல், காமன் வெல்த் ஊழல், ஆதர்க்ஷ் ஊழல், 1.76 லட்சம் கோடி  ரூபாய் 2G  அலைக்கற்றை ஊழல், 1.80 லட்சம் கோடி நிலக்கரி ஊழல் ஆகிய வற்றால் கிடைத்த பணம் மரத்திலா காய்த்தது?

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டால் வால் மார்ட் இந்தியாவில் கடை விரிக்கப் போகிறது. ஒரு வால் மார்ட் கடை திறந்தால் 1400 சில்லறை வர்த்தக கடைகள் மூட வேண்டிய சூழல் உருவாகும். மேலும் 5000 பேர் வேலை இழப்பார்கள். 98 விழுக்காடு வர்த்தகம் சில்லறை வர்த்தகத்தின் மூலம் தான் இந்தியாவில் நடக்கிறது. 40 லட்சம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆக மொத்தம் 35 லட்சம் பேர் வேலை இழக்க வேண்டிய சூழல் உருவாகும். அன்னிய முதலீட்டால் விவசாயிகள் பலன் பெருவர் என்று சொல்லும் காங்கிரஸ் அரசு 65 வருடங்களாக விவசாயிகளைப் பற்றி எண்ணிப் பார்த்ததுண்டா? ஏன் இந்த திடீர் கரிசனம்?

டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு மக்களை வாட்டி வதைக்கின்றது. எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு சாதாரண மக்களுக்கு மட்டும் தான். மாண்புமிகுகளுக்கு இது பொருந்தாது.

விவசாயிகள் விளை பொருளுக்கு உற்பத்தி செலவை விட 50 விழுக்காடு வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் அதற்கு இன்னும் முடிவு இல்லை. விவசாயியைத் தவிர அனைவரும் தன் பொருளுக்குக்கான விலையை நிர்ணயம் செய்து கொள்ள முடியும்.

மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு மக்களின் வயிற்றில் அடிக்கின்றன. அடுத்து வருடா வருடம் மின் கட்டணம் உயர இருக்கின்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளிடம் வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்.