Tuesday 13 November 2012

தீபாவளியைத் தவிர்ப்போம்


வருடம் தோறும்  வரும் தீபாவளியைப் போல் இந்த வருடமும் வந்து போய்விட்டது. சாமானியன் வயிற்றை, வாயைக் கட்டி சேர்த்து வைத்த பணத்தை கொண்டு தனது குழந்தைகளின் ஆசையைப் பூர்த்தி செய்து, தீபாவளியை வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்து தற்போது அடுத்த வேளை உணவுக்காக உழைக்க தயாராகிவிட்டான்.

தீபாவளியன்று வெடிக்கும் பட்டாசுப் புகை தொழிற்சாலையிலிருந்து 3 நாட்கள் வெளியாகும் புகைக்குச் சமம். பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் உயிர் இழப்புகள் ஏராளம். நமது சிறிது நேர சந்தோசத்திற்காக நாம் வெடிக்கும் பட்டாசு அடுத்தவர் உயிரைப் பறிக்கவும்,அடுத்தவர் சொத்துக்களை அழிக்கவும் காரணமாகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள்(குழந்தைத் தொழிலாளியும்) பெறும் கூலி வெறும் 70 ரூபாய் தான். ஏழை, எளிய மக்கள் தங்கள் வயிற்றைக் கழுவ அங்கீகாரம் இல்லாத, பாதுகாப்பு இல்லாத தொழிற்சாலைகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். இதனால் வருடம் தோறும் ஏற்படும் உயிரிழப்புகள் ஏராளம். சமீபத்திய முதலிபட்டி விபத்து ஓர் உதாரணம்.

தீபாவளி என்பது நரகாசுரன் என்ற அரக்கனை அழித்த திருநாள் என்று புராணம் கதை சொல்கிறது.

நம் மனதிலிருக்கும் தீய குணங்களை அகற்றி,  அன்பு, வாய்மை, சகோதரத்துவம் என்ற நல்ல குணங்களை மனதில் கொண்டு வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும். அப்படி வாழ்ந்தால் நமக்கு தினமும் தீபாவளிதான். இதற்கு தீபாவளி என்றொரு நாள் தேவையில்லை.

சிந்திப்போம்!

Sunday 11 November 2012

ராம்லீலா கேலிக்கூத்து



அண்மையில் புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் சோனியாவின் காங்கிரஸ் கட்சி சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றி ஒரு பேரணியை நடத்தியது. 2 லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும் மிகவும் வெற்றிகரமான பேரணி என்று  தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் சொல்லப்பட்டது. கலந்து கொண்ட மக்களில் எத்துணை பேருக்கு FDI பற்றி தெரியும். ஒரு வேளை உணவுக்கும், அரசியல் புரோக்கர்கள் வீசியெரியும் சில்லறை காசுக்காக கூடிய கூட்டங்களாகவே இருக்க முடியும். இவை அடுத்த தேர்தலில் வாக்குகளாக மாறும் என்று காங்கிரஸ் கனவு காண்கிறது.

91 ம் வருடத்திய தேர்தல் வாக்குறுதியில் 90 சூன் மாதத்தின் விலைக்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறியது. உலக வங்கி மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய விருப்பப்படி மன்மோகன் திட்டமிட்டு நிதி மந்திரியாக ஆக்கப்பட்டார். அவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. கொல்லைப்புற வழியாக மேல்சபையின் உறுப்பினரானவர். நிதி மந்திரியாக பதவியேற்றபின் பெட்ரோல், டீசல் விலையை 90 சூன் விலைக்கு குறைக்க முடியாது என்று அறிவித்தை யாரும் மறந்துவிட முடியாது.

அதன்பின் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அன்னிய முதலாளிகளுக்கு கதவு திறந்து விடப்பட்டது. பொருளாதார சீர்திருத்தால் பாலாறும்,தேனாறும் ஓடும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் முதலாளிகள் பெரும் முதலாளிகளாகவும், ஏழைகள் பிச்சைக்காரர்கள் ஆன கதை தான் நடந்தது.

சில்லறை வர்த்தகம், இன்சூரன்ஸ் மற்றும் பென்சன் ஆகிய வற்றில் அன்னிய முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வந்தால் வேலையில்லா திண்டாட்டம் பெருகும் என்று சொன்ன காங்கிரஸ் இன்று விவசாயிகள் பலன் அடைவார்கள், வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்று சொல்வது சாத்தான் ஓதும் வேதம் தான் தவிர வேறு ஒன்றும் இல்லை.

தற்போது உள்ள அரசியல் அமைப்பு ஏழைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு உகந்ததாக இல்லை. எட்டாக் கனியாக இருக்கிறது. அதைக் களைய பாடுபடுவேன் என்று ராகுல் காந்தி ராம்லீலா மைதானத்தில் கூறியதை சோனியாவைத் தவிற ஏனைய காங்கிரஸ்காரர்களும் நம்பவில்லை.

வால்மார்ட் எருமை........பயிரை மேய்ந்தால் என்ன?
சாணி உனக்கு....... சந்தோசம் எங்களுக்கு...   என்று மன்மோகன் கம்பெனி சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?